மெட்ரோ பேருந்து சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள தனியார் துறையினர்!
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பேருந்து சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பேருந்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கடுமையான வழக்குகள்
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், "மெட்ரோ பேருந்துகளை விபத்துக்குள்ளாக்குபவர்கள் பொதுச் சொத்துக்களுக்கே சேதம் விளைவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சாரதிகள் அல்லது உரிமையாளர்கள் கடுமையான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என நினைக்கிறேன்.
ஏனெனில், இலங்கை மக்களின் பொதுச் சொத்துக்களுக்கே இவர்கள் சேதம் விளைவிக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

அவற்றிற்குத் தனியார் பேருந்துகளில் பெரும்பாலானவற்றினால் எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. மிகச் சில பேருந்துகளே இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன. அதனால் இது ஒட்டுமொத்தத் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினையல்ல.
எனவே, வீணாகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துவிட்டுப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல், நாடு ஏற்றுக்கொண்ட இந்த முறைமைக்கு அமையச் செயற்படுங்கள், அதற்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள்.
ஏனெனில், நாம் எப்படியும் ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையைத் தனியார் துறைக்குத் திறந்துவிடுவோம்" என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |