ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள 18 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!
துபாய் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகி இலங்கையில் பல்வேறு குற்றங்களை மேற்கொண்டு வரும் 18 பாதாள உலக நபர்கள் அந்த நாடுகளில் கைது செய்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த 18 நபர்கள் மற்றும் அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலானய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் 75 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜதந்திர மட்டத்தில் விசாரணை
அவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்நாட்டு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, அந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவதால், சிலர் அந்த நாடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முடிந்ததும் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தற்போது கண்காணிக்கப்பட்டு வரும் இந்த 18 பேரையும் கைது செய்து இந்த நாட்டிற்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையின் உதவியுடன் இராஜதந்திர மட்டத்தில் விசாரணைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சத்தில் குற்றவாளிகள்
கொலைகள், துப்பாக்கிச் சூடு, கப்பம் கோருதல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறிய சிலர், தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் அந்த நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து இந்த நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும், இந்தோனேசிய காவல்துறையுடன் இணைந்து உள்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையால், பல சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது அச்சமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

