இலங்கை முழுவதும் திடீர் மின் தடை : சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை
நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்று தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணையக்குழுவுக்கும் (PUCSL) அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்சன தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை குறித்த அறிக்கையின் ஊடாகப் பரிந்துரைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மின் விநியோகம்
இதேவேளை மின்சாரப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நேற்று (17) காலை 11.45 அளவில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது.

எனினும், பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் நேற்றிரவு 09.56 அளவில் மின் விநியோகம் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்தடைக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் மேல் கொத்மலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட போதிலும், மின்சார விநியோகத் தடைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மின்சாரத் தடையினால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |