நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதில் சிக்கல் என்கிறார் ஆளும் கட்சி எம்.பி
நாட்டில் ஊழலும், அரச மோசடிகளும் அதிகரித்துவிட்டன. இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என்கிறார் ஆளும் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadharshana Yapa).
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நாடு தொடர்பில், நேற்று(23) கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது,
“நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும்.
இந்த அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது அவ்வாறான மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை.
இலங்கைக்கு என்ற ஒரு பொருளாதார கொள்கையை உருவாக்கிக்கொள்ள தவறியுள்ளமையே நாடு உற்பத்தித்துறையில் வீழ்ச்சியடைய பிரதான காரணமாகும்.
சர்வதேச கடன்களை பெற்றுக்கொண்டு வெறுமனே உண்டு செலவழித்து வருகின்றோமே தவிர அவசியமான எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
நாட்டின் அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் பொதுவான பொருளாதார கொள்கை ஒன்றையே கொண்டு செல்ல வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.