இலங்கையை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத பல இளைஞர்கள் மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு தேடி செல்லும் அதேவேளை மறு பக்கம் தொழில் வல்லுனர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட 6,000 க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் சம்பளத்திற்கு அதிக வரி
தற்போது பணியாளர்களின் சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடவுச்சீட்டு பெறுவோர் தொகை அதிகரிப்பு
இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், 2021 ஆம் ஆண்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.