13 ஆம் திருத்தத்தை இரத்து செய் - அணிதிரளும் பிக்குகள் - ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு!
13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மகா சங்கத்தினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரச தரப்பை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்காக பௌத்த பிக்குகள் இன்றைய தினம் கொழும்பை நோக்கி பயணிக்கவுள்ளதாக மைத்ரி நிக்காயே எனும் பௌத்த பிக்குகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
13 ம் திருத்தம் - எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இன்று காலை விக்டோரியா பூங்காவுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிட்டத்தட்ட 5000 பௌத்த பிக்குகள் கொழும்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ம் திருத்தம் - பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமதக் குழு ஆதரவு
அதேசமயம், 13 ஆம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமதக் குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
13 ம் திருத்தம் - பிரேரணை நிறைவேற்றம்
அதேசமயம், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கொட்டகலை பிரதேச சபை மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போது கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணைக்கு சகல கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவை வழங்கியுள்ளனர்.
