வெடித்து சிதறிய கட்டிடங்கள் : உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யா
ரஷ்யாவின் (Russia) எண்ணெய் உற்பத்தி மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் நான்கு பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மிகப்பெரிய தாக்குதல்
சமீபத்தில் உக்ரைன், ரஷ்ய எல்லைப் பகுதிகளில் பல ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, மாஸ்கோவுக்கு அருகிலுள்ள சில இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் தாக்கப்பட்டன.
அதற்கு பதிலடியாகவே ரஷ்யா இப்போது கீவ் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதாக சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்று (28.08.2025) அதிகாலை 4 மணியளவில் கீவ் நகரம் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் 10 பகுதிகளில் 33க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகின. குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளே நேரடி இலக்காக மாறியுள்ளன.
ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் நடத்திய துல்லியத் தாக்குதலில் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், பிரிட்டிஷ் கவுன்சில், அஜர்பைஜான் தூதரகம், துருக்கி வணிக நிறுவன அலுவலகம் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள் சிதைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
