உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு எதிராக நாடுதழுவிய அடையாள போராட்டம்!
ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு பயன்படுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் அடையாள போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.
அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட பரிந்துரையின்படி ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தின் மூலம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியக் கணக்குகளில் உள்ள சுமார் 25 இலட்சம் ரூபா உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது.
அரசால் கையாளப்படும்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிய கணக்குகளின் மீது சுமத்தப்பட்டால் இன்னும் 16 வருடங்களுக்குள் அனைத்து ஊழியர்களினதும் சேமிப்புக்களில் இருந்து அரைவாசித்தொகை இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியும் அரசால் கையாளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு மூலம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி அங்கத்தவர்களுக்கு நிதி ரீதியாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்காமல் போகக்கூடிய அபாய நிலை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாளைய தினம் (27) நாடு தழுவிய ரீதியில் அடையாள போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.