அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று உக்கிரமடைந்த போராட்டங்கள்!
அரச தலைவரையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி ,தேசிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. கொழும்பு நகரமண்டப பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக, இராஜகிரிய, பத்தரமுல்லை, பெலவத்தை, கோட்டே முதலான பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும்,எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் உள்ள வாகன சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பலாங்கொடை நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி நகரிலும் வாகன சில்லுகள் எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை, தியத்தலாவை, பெரகல மற்றும் பண்டாரவளை நகரங்களில் பிரதான பாதைகளை இடைமறித்து பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹப்புத்தளையிலும் பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, ஏ-9 வீதியில், வவுனியா மூன்று முறிப்பு பகுதியில், பேருந்து பணியாளர்கள், பேருந்துகளை வீதியின் குறுக்காக நிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் போராட்டம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.










