ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி போராட்டம்
திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று (05) காலை பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பின்னர் மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான வீதியூடாகச் சென்று பிரதேச சபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர்களையும் பெற்றுத்தருமாறு கோரிக்கை
மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் 450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 34 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 16 ஆசிரியர்களே இப்பாடசாலையில் பணியாற்றுகின்றனர்.

இந்தநிலையில் ஏனைய ஆசிரியர்களையும் பெற்றுத்தருமாறு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் இடைவிலகி தூரப் பிரதேச பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |