தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம் பெயர் தேசத்தில் போராட்டம்
தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறியின் கோரமுகத்தினை சர்வதேச அரங்கிற்கு வெளிக்கொணரும் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை மறுதினம் பிரித்தானியாவில் (20.09.2023) முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழினத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்த் தேசிய இனத்தின் போராளி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலிற்காக அவரின் திருவுருவப்படம் தாங்கி வந்த ஊர்தி மீது நேற்றைய தினம் (17) பேரினவாதத்தினரால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
குறித்த தாக்குதலில் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தி அடித்து நொருக்கப்பட்டது மாத்திரமல்லாமல் பேரணியில் கலந்துகொண்ட தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இனவழிப்பின் கோரமுகம்
இவ்வாறான செயல்களின் வாயிலாக சிங்கள இனவாத கும்பல் இனவழிப்பின் கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது.
இந்த மிலேச்சத்தனமான குற்றச்செயலிற்கு கண்டனம் தெரிவித்து புலம்பெயர் தேசத்து உறவுகள் நீதிகோரி சர்வதேச அரங்கில் தமக்கான நீதியை வேண்டி போராட தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதியன்று பிற்பகல் 3 மணியளவில், பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இனவழிப்பின் கோரமுகத்திரைகளை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்று நீதியை பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.