இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் போராட்டம்
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் இன்று (26) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் சற்று முன்னர் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









