மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம்
புதிய இணைப்பு
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய பின்னர், மன உளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக தற்போது நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய், கைது செய், கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்தும் தமது எதிர்பபை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் பாடசாலைக்கு முன்னால் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் (Colombo) தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என கோரி கொழும்பில் இன்று (08) காலை குறித்த போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்
கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதன்பின்னர் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு பேரணியாக சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உறுதியளித்தனர்.
இறுதியாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை நிகழ்த்தினர்.
இதேவேளை பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
