போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை)
ஐந்தாம் இணைப்பு
கொழும்பில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பல பகுதிகளில் இருந்து கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலின் போது ஆர்பாட்டகாரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஆர்பாட்டகாரர்கள் நோயாளி காவு வண்டிமூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நான்காம் இணைப்பு
இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யுத்த விமானங்கள் போராட்டம் இடம் பெறும் பகுதியைக் சுற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் கதவினை உடைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் கொழும்பின் சகல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதால் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் அப்பகுதியில் உலங்குவானூர்திகள் வட்டமிட்டு வருவதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
பிரதமரின் உத்தியோக பூர்வ காரியாலயத்தின் கதவுகளை உடைத்து போராட்டகாரர்கள் உள்நுழைய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் போராட்டகாரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ரணில் உடனடியாக பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், சிறிலங்கா அதிபர் பதவியை ஏற்க கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பிரதமரின் இல்லத்தை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இராணுவம் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் உடனடியாக பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், சிறிலங்கா அதிபர் பதவியை ஏற்க கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய சிறிலங்கா அதிபராக பதவியேற்க உள்ளார் என வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
முதலாம் இணைப்பு
கண்ணீர் புகைதாக்குதல்
சிறிலங்கா பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் பெருந்திரளான அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.