யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இன்றும் நாளையும் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் இன்று 20ஆம் திகதியும் நாளை 21ஆம் திகதியும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
யாழ்.மாவட்டம் தவிர்ந்த மாவட்டங்களில்
இதன் தொடர்ச்சியாக வடமாகாணத்தில் யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் 12ம் திகதி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று 20ம் திகதி ஆதார வைத்திய சாலைகள் சாவகச்சேரி மற்றும் தெல்லிப்பளை ஆகியவற்றில் நண்பகல் 11:30 மணியிலிருந்து 1 மணி வரையிலும், நாளை 21ம் திகதி நண்பகல் 11.30 மணியிலிருந்து 1 மணி வரையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.