முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சூளுரை
சர்வதேச மகளிர் தினமான இன்று திருகோணமலையில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் நடை பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான குறித்த நடை பவனியானது கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன், ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா, கடந்த 5 வருட காலமாக தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்னமும் விடிவு கிடைக்காத நிலையில் தாம் தமது பிள்ளைகளை வீதியில் இறங்கி தேடிவருவதாக தெரிவித்தார்.
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை அற்றவர்களாக இன்று வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கும் பெண்களை இன்று சர்வதேச மகளிர் தினத்திலாவது சர்வதேசம் உற்றுப்பார்க்கவேண்டும்.
தமக்கு ஜனநாயக பொறி முறையிலான நீதி ஒன்றே அவசியம். அதற்கு சர்வதேசம் முன் நின்று அதனை பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முன்னிலைப்படுத்தி கைது செய்யப்பட்ட தமது உறவுகளை இந்த அரசாங்கமானது இன்னமும் விடுதலை செய்யவில்லை. அவர்களது முடிவு தெரிய வரும்வரை தாம் இப்போது முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தினை கைவிடப் போவதில்லை என குறிப்பிட்டார்.



