சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு
சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு, தமிழர் தாயக பகுதியிலே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு தற்காலம் வரையிலும் பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தமிழர் தாயகமானது முகம் கொடுத்து வருவதுடன் அந்த காலப்பகுதியிலே எமது பல உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்களது உறவினர்கள் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். அதில் நிறைய தாய்மார்கள் இறந்தும் கூட இருக்கின்றனர்.
எங்கள் மக்களுக்கான நீதி
இன்றும் நம் மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள பௌத்தமயமாக்கல், தமிழர்களுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படாமை என அதிகார ரீதியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றமையானது எங்கள் மக்களுக்கான நீதி இந்த நாட்டில் தொடர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமையையே குறிக்கின்றது.
தமிழ் மக்கள் தங்கள் தாயக பகுதியில் அரசியல், கலாசார பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எமக்கான நீதி மறுக்கப்படுவதையும் நாம் உரத்துச் சொல்வதே போராட்டங்களின் தார்மீக நோக்கமாகும்.
இன்றளவும் தமிழர் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கின்றன. வலிகாமம் கிழக்கு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையிலேயே எங்கள் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த வேளையில் முத்தையன்கட்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசினுடைய சர்வாதிகாரத்தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.
தமிழ் மக்கள் கேட்பதற்கு யாருமற்ற எதிலிகளாக சொந்த நிலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வரும் முன் அரசியல் கைதிகளின் விடுதலையை பற்றி கதைத்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியாது என்று சொல்லியிருப்பது என்பது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையின்மையையே காட்டுகின்றது.
தமிழ் சமூகத்தின் மீதான இனப்படுகொலை
கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மணி மனிதப்புதைகுழிகளில் இருந்து தமிழ் சமூகத்தின் மீதான இனப்படுகொலை வெட்ட வெளிச்சத்துக்கு வருவது தெரிந்தும் எதுவித நீதியும் இதுவரை எட்டப்படவில்லை.
மனித புதைகுழி பற்றி சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் தங்கள் சொந்த நிலங்களுக்காக போராடுபவர்கள் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் அதிகாரத்தின் அதி உச்ச கொடூர போக்கையே காட்டுகின்றது.
இந்த வேளையில் வீதி எங்கும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதுவித நீதியுமற்று போராடி வருகின்றனர்.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நீதிக்கான தவிப்புக்கள் தணியப்படவில்லை. அவர்களுக்கான நீதி மாறி மாறி வரும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் வழங்கப்படவில்லை வழங்கப்படாது. இதனாலேயே வரும் ஆவணி 30 ஆம் திகதி சனிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தங்கள் பிள்ளைகளை தேடி சர்வதேச நீதி விசாரணை கோரி போராட முனைந்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கில் கிட்டுப்பூங்காவிலிருந்து செம்மணி வரையிலும் கிழக்கில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரையிலும் சர்வதேச நீதிக்கான மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களாக அவர்களது போராட்டத்திற்கு முற்றுமுழுதான ஆதரவினை வழங்குவதுடன் பக்கபலமாகவும் இருப்போம் என்று சொல்லிக் கொள்கின்றோம்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக போராட்டக் களத்திற்கு நாங்கள் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன் இந்திய அரசியலில் ஆர்வம் செலுத்தும் எங்கள் தமிழ் இளந்தலைமுறையினர் எங்கள் மக்களின் பிரச்சினைகளில் பெரிதும் அக்கறையின்றி இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.
எனவே எங்கள் நிலத்தினுடைய அரசியலை புரிந்து கொண்டு எங்கள் மக்களுக்காக காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்காக போராட்ட களத்திற்கு அனைவரும் ஒன்று கூடி வரவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக் கொள்கின்றோம்” மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

