யாழ் வைத்தியசாலைகளில் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்பு எதிர்ப்பு வாரம் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலைகளில், வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து, கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் தமது எதிர்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
யாழ். போதனா வைத்தியசாலை
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் திருத்தங்கள், மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்தியசாலைகள் தற்போது எதிர்நோக்கி வருகின்றன.
இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் கறுப்பு எதிர்ப்பு வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் முதல் நாள் எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர்.
பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலை
இதேவேளை, பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்றைய தினம் கறுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வாக வைத்தியசாலை வளாகத்தில் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கறுப்பு பட்டி அணிந்து கடமையினை மேற்கொண்டும் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதும் அரசாங்கத்தினால் நிர்வகிக்க தவறிய மருந்து பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிராக, அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்லும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

