மன்னாரில் வலுக்கும் காற்றாலைக்கு எதிரான போராட்டம்!
காற்றாலை அமைக்கப்படும் பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் காற்றாலை கணியமணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்துக்குள் இனியும் வேண்டாம் என்று ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் ஜோசேவாஸ் கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆதரவு தெரிவித்த மக்கள்
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிவப்பு நிற தலைப்பட்டிகளை அணித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மக்களின் விருப்பத்துக்கு மாறாக தினிக்கப்படும் குறித்த செயற்திட்டங்களுக்கு எதிராக தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
அதே நேரம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா வேப்பங்குள கிராம மக்களும் அவர்களுடன் வெப்பங்குளம் பங்குதந்தை அருட்சகோதிரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
