சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்!
சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் 08 மாவட்டங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் நடாத்தப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐஓஎம் அலுவலகம் முன்பாக காலை இப் போராட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு வொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
தமிழர் தாயகத்தில் தொடரும் காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை முன்னிறுத்தி, அவற்றிற்கான சர்வதேச விசாரணையை கோரி கிளிநொச்சியில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வடக்கு கிழக்கு தமிழர்தாயகத்தில் தீர்வின்றி தொடரும் பிரச்சனைகளை உள்ளடக்கி, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை
சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மன்னார்
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கான உண்மைகளை கண்டறிதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்துதல், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் குடிசார் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.