போதை வியாபாரிகள் தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு வாள்வெட்டு
சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கிய இருவர் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றதுடன் தாக்குதல் மேற்கொண்ட குழு தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாள்வெட்டு குழுவினர் தாக்குதல்
இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக சம்பவ தினமான நேற்று மாலை 6.00 மணியளவில் மாங்கேணி பகுதியில் வைத்து இருவர் மீது மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில் 40 வயதுடைய செல்வபுரம் மாங்கேணியைச் சேர்ந்த பொன்னம்பலம் ஜெயச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது பொன்னம்பலம் சுரேந்திரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்ததுள்ளனர். தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதி
இதில் படுகாயமடைந்த இருவரும் மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |