என் கணவர் குற்றவாளி என்றால் தண்டியுங்கள்... மனைவி உருக்கமான கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள். சந்தேக நபராக சிறையில் வைத்து காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''2020ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எனது கணவரை விசாரணை என்ற அடிப்படையில் வரவழைத்து கைது செய்தார்கள்.
எனது கணவர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றுகின்ற நிலையில் விடுதலைப் புலிகள் மீள்உருவாக்கம் என்ற போர்வையில் சந்தேக நபராக எனது கணவரை தடுத்து வைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கப்படுகின்றனர் என்றால் அதை காண்பியுங்கள் பார்ப்போம்.
30 வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்க்கையில் நான் முன்னாள் போராளியாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியே வந்தேன்.
எங்களுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், யுத்த காலத்தில் நாங்கள் அனுபவித்த வேதனையை விட யுத்தம் முடிவடைந்த பின் அனுபவிக்கின்ற வேதனை அதிகமாக உள்ளது.
எனது கணவர் அவ்விதமான குற்றங்களை செய்யவில்லை என எனக்கு தெரியும். குற்றம் செய்திருந்தால் அவர் செய்த குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குங்கள் எனக் கூறியுள்ளார்.
