முதல் சூட்டிலேயே மயங்கிய சிறுவன்: தாய் வழங்கிய பகிரங்க வாக்குமூலம்
அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ்ஸின் தாயார் துப்பாக்கிச்சூடு தொடர்பில் சில விடங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சிறுவனின் இறுதிக்கிரியைின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜீப்பில் வந்த காவல்துறை
“தனது மகனுக்கும் வெள்ளை மோட்டார் சைக்கிளில் நின்ற காவல்துறையினருக்குத் இடையே தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அவர்களுடன் பிரச்சினைபட்டு சென்றவேளை ஜீப்பில் வந்த காவல்துறையினராலேயே துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது.
ஜீப்பில் வந்த காவல்துறையினருக்கும் தமக்குமிடையே எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.
வாகனத்தை நிறுத்திய பின்னரே துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இன்று எமது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் போராட்டம் செய்ய வேண்டாம் என்று மறித்தனர். காவல்துறையினர் காட்டிய இடத்திலேயே புதைகுழி வெட்டி, எனது மகனின் சடலத்தை புதைத்துள்ளோம்.
அந்த இடத்தில் கிடங்கு வெட்டியவேளை தண்ணீர் வந்தது. அந்த இடத்திலேயே புதைத்துள்ளோம். எனது மகன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது 1.30க்கு என்று செல்லப்படுகிறது.
கஞ்சா வழக்கு
ஆனால் 5.30 மணிக்கே அவரது சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு இடத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது, ஆனால் வேறொரு இடத்திற்கு சடலம் இழுத்து செல்லப்பட்டு போடப்பட்டது.
எனது மகனோடு சென்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை சித்திரவதை செய்துள்ளார்கள்.
அவர்களின் உடற்பகுதியில் அடி காயங்கள் உள்ளன. கஞ்சா வழக்கு மற்றும் வேறு வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்போவதாக மிரட்டினார்களாம்.
முதல் சூட்டிலேயே அவர் மயங்கியதாக கூட இருந்தவர்கள் கூறுகின்றார்கள்.
அதன்பின்னரே ஏனைய துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளன. இது திட்டமிட்ட ஒரு கொலை. எனவே இதற்கு ஒரு சரியான முடிவெடுத்து, எனது பிள்ளையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சிறுவனின் மரணத்துக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
