மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான பரிந்துரையை இறுதி செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான பரிந்துரையை இறுதி செய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரிய இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கமைய, இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசமானது இலங்கை மின்சார சபைக்கு மூன்றாவது தடவையாக வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத் திருத்தம்
கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு, மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையொன்று இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், முன்வைக்கப்பட்ட மின் கட்டண குறைப்புக்கான குறித்த பரிந்துரை, போதுமானதாக இல்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு தெரியப்படுத்தியிருந்தது.
அத்துடன், அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தி நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னதாக மீண்டும் புதிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்குத் தெரிவித்தது.
கால அவகாசம்
எனினும் குறித்த மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை நவம்பர் மாதம் 22ஆம் திகதிவரை கால அவகாசம் கோரியிருந்தது.
எனவே, இவ்வாறான பின்னணியில், மின் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளக் குறைந்தது 6 வாரங்களாவது தேவைப்படும் எனவும், அதற்கமைய இந்த வருடத்துக்குள் மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |