சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள புதிய தீர்மானம்
புதிய விமானங்களை கொள்வனவு செய்வது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதனை பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத் (Charita Herath) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், இந்த விமானங்கள் வாங்குவதை முழுமையாக ரத்துச்செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என கடந்த நாட்களில் தகவல்கள் வெளிவந்திருந்தன.
கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்துகின்றன என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

