வலுக்கும் போர் பதற்றம் - ரஷ்ய அரச தலைவர் கோரியுள்ள ஆணை
ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி நாடாளுமன்றத்திற்கு அரச தலைவர் புடின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை இலட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. இதனை தொடர்ந்து டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களுக்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது.
உக்ரைன் எல்லைக்குள் ரஷ்யா தனது படைகளை அனுப்பி வைத்துள்ளதால் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி நாடாளுமன்றத்திற்கு அதிபர் விளாடிமிர் புடின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கைக்கு ரஷ்ய நாடாளுமன்றம் இன்றே ஒப்புதல் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த உடன் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் உக்ரைன் அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
