ரஷ்யாவிடம் உக்ரைன் மூதாட்டி எழுப்பிய கேள்வி
இவ்வளவு பெரிய ரஷ்யா இருக்கும் போது எங்கள் வீட்டை மட்டும் ஏன் குண்டுவீசி அழிக்கிறீர்கள் என 80 வயது உக்ரைன் மூதாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைனின் டான்பாஸ், இப்போது ரஷ்யாவின் கொடூரமான போரின் மையமாக உள்ளது. இதனால் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியுடன் நேரடி இணைப்பை வழங்கும் பாக்முத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும், பாக்முத் பகுதியானது, உக்ரைனிய போர் கட்டளை மையமாக செயல்படும் ஒரு முக்கியமான சந்திப்பாக உள்ள பகுதி. இந்நிலையில், பாக்முத்தை கைப்பற்ற ரஷ்யா பல நாட்களாக போராடி வருகிறது. சமீபத்திய ரஷ்ய வான்வழித் தாக்குதலால் அங்கு பல வீடுகள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில், அங்கு வாழ்ந்துவரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதான மூதாட்டியின் வீடும் அழிவை சந்தித்தது. இதன் காரணமாக, அந்த மூதாட்டி இடிபாடுகளுக்கு மத்தியில் பயத்துடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளால் ஏவப்பட்ட வெடிகுண்டு, தனது சமையலறையில் தரையிறங்கிய திகிலூட்டும் தருணத்தை அந்த மூதாட்டி மனவேதனையுடன் விவரித்தார். அவர் கூறியதாவது:-
"நான் காயமடையாமல் இருக்க, கடவுளிடம் என் வழக்கமான காலை பிரார்த்தனையை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், ஒரு பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது. என் தலையில் சில சாதனங்கள் விழ ஆரம்பித்தன. ரஷ்ய வான்வழி தாக்குதலால் என் முழு வீடும் சேதமடைந்தது.
நான் கடவுளிடம் கேட்கிறேன், 'அவர்களுக்கு(ரஷ்யர்களுக்கு) என்ன தான் வேண்டும்? ரஷ்யா அவர்களுக்கு போதுமானதாக இல்லையா? அவர்கள் ஏன் மக்களைக் கொல்கிறார்கள்?' இந்த காரணத்தை நான் கடவுளிடம் கேட்கிறேன்" எனத் தெரிவித்தார்.
