குறுஞ்செய்திகள் ஊடாக தேர்தல் பிரச்சாரம்: கவனம் செலுத்தும் ஆணைக்குழு
பொதுத் தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைதியான காலப்பகுதியில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக பிரச்சாரம் செய்ய முடியாத நிலையிலும், தனது தொலைபேசிக்கே வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் குறுஞ்செய்திகள் வந்ததாக தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், வேட்பாளர்களை ஊக்குவித்து தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் தேர்தல் ஆணைக்குழு தனி கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
பொதுத் தேர்தல் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு கண்காணிப்பு நிலையம் சமூக ஊடக நடத்தைகளை அவதானித்து வருவதாகத் தெரிவித்த அவர், குறுஞ்செய்தி தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளை நேரடியாக கட்டுப்படுத்துவது கடினம் என சுட்டிக்காட்டிய அவர், சமூக ஊடகங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும், சில சமூக ஊடகங்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |