பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: கடலோரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (08) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் கொந்தளிப்பு
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும். வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடல் பகுதிகள் மிதமான அலைகளுடன் காணப்படும். இருப்பினும், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்ற வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |