அதிகரிக்கப்போகும் மழைவீழ்ச்சி! மக்களுக்கு வெளியாகியுள்ள முன்னெச்சரிக்கை
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்கள்
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |