ராஜகுமாரி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
ராஜகுமாரி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தான் பணிபுரிந்த பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2023 கடந்த மே 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் அன்றைய தினமே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த பெண்
தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்கு இலக்கான காயங்கள் காணப்பட்டதாகவும் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணான ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவரது மரணத்திற்கு நீதி கோரி கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி ராஜகுமாரி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கொழும்பு புதுக்கடை இலக்கம் 04 நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று (15.05.2025) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோரிய ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமர்ப்பிப்புக்களை பரிசீலித்த நீதிபதி, ஜூலை 21ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
