அரசியலில் தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர்
அம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ), முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச (Samal Rajapaksa) மற்றும் பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தது.
எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ச (Sasindra Rajapaksa) மொனராகலை (Monaragala ) மாவட்டத்திலும் மற்றும் நிபுண ரணவக்க (Nipuna Ranawaka) மாத்தறை (Matara) மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுத் தேர்தல்
தற்போது, பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முன்னாள் மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க (T.V.Sanaka) வேட்புமனுவை கையளித்துள்ளார்.
இருப்பினும், 1936 ஆம் ஆண்டில் டி.எம். ராஜபக்ச (T.M.Rajapaksa), அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளராகத் தேர்தல் அரசியலைத் தொடங்கினார்.
தேசியப் பட்டியல் வேட்பாளர்
இதையடுத்து, டி.ஏ.ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச, ஜார்ஜ் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச மற்றும் ஷியாம்லால் ராஜபக்ச என அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் வேட்பாளர்களாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தோன்றினர்.
இந்தநிலையில், முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இம்முறை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டாலும் இவர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.
மேலும், அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |