நாட்டுக்கு வெளியே பணத்தை வைத்திருக்கும் ராஜபக்சக்கள்: சரிவிற்கு இவர்களே கரணம் என்கிறார் சுமந்திரன்
நாட்டின் பொருளாதார சரிவிற்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம், அவர்கள் நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் பணத்தினைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதர நெருக்கடி குறித்து நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ராஜபக்ச சகோதரர்கள்
"உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்கக்கூடிய அளவுக்கு போதுமான பணத்தினை நாட்டுக்கு வெளியே வைத்திருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் அதனை வழங்கியிருக்க நேர்ந்திருக்கும்.
நாட்டிற்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருக்கும் அனைத்து பணத்தையும் நாட்டிற்குள் கொண்டு வர முடியும், அந்த பணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.
பொருளாதாரம் சரிவடைந்தது
முன்னாள் அதிபர், அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலர் இணைந்து பொதுமக்களின் பணத்தினை திருடியதால் தான் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது, அவ்வாறு இழப்பீடு கோரினால், திருடப்பட்ட பணத்தை மீண்டும் கருவூலத்திற்கு கொண்டு வர உயர் நீதிமன்றம் உத்தரவிடும்." என அவர் கூறினார்.