இலங்கை மக்களின் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்சாக்கள் - அமெரிக்க செனட்டர் வெளிப்படை
மக்கள் பணத்தில் வளமான ராஜபக்சாக்கள்
இலங்கை மக்களின் பணத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களை வளப்படுத்திக் கொண்டதுடன் இரக்கமின்றி தங்கள் எதிரிகளை மௌனமாக்கியது, இனப் பதற்றங்களைத் தூண்டி, நாட்டைப் பொருளாதாரச் சீர்குலைவுக்குள்ளாக்கியது என்று அமெரிக்காவின் செனட்டர் பற்றிக் லீஹி தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் துஷ்பிரயோகத்திற்குப் பின்னர், இலங்கைக்கு இன சகிப்புத்தன்மை, சமமான பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள அரசாங்கம் தேவை. அது அமெரிக்கக் கொள்கையின் மையமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசம் வலுவான ஆதரவை வழங்க வேண்டும்
இலங்கை மக்களை பாதித்துள்ள அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்புகளுக்கு இந்தத் தீர்மானம் கவனம் செலுத்துவதாக தெரிவித்த செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர் மெனண்டெஸ், சர்வதேச சமுகம் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் உறுதியான செய்தி
தங்கள் நாட்டைப் பாதித்துள்ள கடுமையான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தங்கள் அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று இலங்கை மக்கள் உறுதியான செய்தியை அனுப்பியுள்ளனர் என்று செனட்டர் புக்கர் கூறியுள்ளார்.
அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர், செனட்டர் பொப் மெனண்டஸ் உட்பட பல அமெரிக்க செனட்டர்கள், ராஜபக்ச குடும்பத்தின் கீழ் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒரு விரிவான சர்வதேச அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கும் செனட் தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.