ராஜித சேனரத்னவை புகழும் சமன் ரத்னப்பிரிய : சிறந்த அமைச்சர் எனவும் தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன சிறிலங்காவின் சிறந்த சுகாதார அமைச்சராக கடமையாற்றியதாக அதிபரின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில், புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டிருந்தார்.
பல அமைச்சு பதவிகளை வகித்த ரமேஷ் பத்திரன
இந்த நிலையில், கடந்த காலங்களில் பல அமைச்சு பதவிகளை ரமேஷ் பத்திரன வகித்திருந்ததாகவும், அவருக்கு அனைத்து துறைகள் தொடர்பான சிறந்த அறிவு இருப்பதாகவும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரமேஷ் பத்திரன ஒரு வைத்தியர் எனவும் இதனடிப்படையில் அவர் சிறிலங்கா சுகாதார அமைச்சில் உள்ள தரப்பினருடன் பக்சார்பற்ற வகையில் இணைந்து செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் வரலாற்றில் ஒரு சிறந்த சுகாதார அமைச்சராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன திகழ்ந்ததாகவும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகவில்லை எனவும் சமன் ரத்னப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.