சாந்தனின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது! இராபர்ட் பயஸ் ஆதங்கம்
உயிரிழந்த சாந்தனின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது? யாரை நாங்கள் நொந்துக்கொள்வது? என திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இராபர்ட் பயஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 2022ஆம் ஆண்டு விடுதலையாகிய 6 பேரில் ஒருவரான இராபர்ட் பயஸ் சாந்தனின் மரணத்தை தொடர்ந்து சிறப்பு முகாமிலிருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத் தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம்.
கடைசியாக தனது கையால் தன் மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்த மகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார்.
இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும்.
அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன..1? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!
மேலும், அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..? எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..? என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |