ராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலை எப்படி சாத்தியமானது தெரியுமா..! நேரடி சாட்சியம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 26 பேருக்கு தூக்கு தண்டணை வழங்கப்பட்ட நிலையில், 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததுடன், 7 பேருக்கு ஆயுள் மற்றும் தூக்குத் தண்டனையை விதித்திருந்தது.
பின் இந்த 7 பேரது விடுதலைக்கு முதற்படி நீதியரசர் சதாசிவத்தினது தீர்ப்பாகும். இதன் இரண்டாவது படிநிலையை ஏற்படுத்தியது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சியே என இந்த வழக்கில் முக்கிய பங்காற்றிய வழக்கறிஞர் புகழேந்தி கூறுகிறார்.
எமது ஊடகத்தின் சமகால அரசியல் விவகாரங்களை அலசும் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்த போது இந்த வழக்கின் முக்கிய சந்தர்ப்பங்களை நினைவூட்டினார்.
விடுதலைக்கு முக்கிய காரணம்
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 1991 ஆம் ஆண்டு இந்த வழக்கிலே 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அந்த 26 பேருக்கும் 1998 இல் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
1999 இல் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த பொழுது அவர்களுக்கான நிதிப் பங்களிப்பினை நெடுமாறன் தலைமையிலான அமைப்பு வழங்கி, சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி 19 பேரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வைத்தமை அந்த வழக்கினுடைய முக்கிய திருப்பமாக இருந்தது.
அதிலே மீதம் இருக்கின்ற ஏழு பேரில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு பின்பு இரண்டாயிரத்திலே அந்த நான்கு பேரில் நளினிக்கு மாத்திரம் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
அதற்கு காரணமானவர் “அப்போது பெண்கள் தொடர்பான அமைப்பிலிருந்த, முன்னாள் அதிபரினுடைய ஒரு உறவினரான கிரி” என்பவராவார். அவர்தான் சோனியா காந்தியிடம் வந்து கடிதம் வாங்கி இவர்களை விடுதலை செய்வதிலும், ஆயுள் தண்டனையாக மாற்றுவதிலும் ஆட்சேபனை இல்லை என்று ஒப்புதல் வாங்கிக் கொடுத்திருந்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி நளினிக்கு மாத்திரம் ஆயுள் தண்டனையாக குறைத்தார். ஏனைய மூவருக்கும் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
அதற்கு பின்பு உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு வழங்கப்பட்டது. அந்தக் கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது. அதற்கு பின்பு 2012 இல் பிரதிபா பட்டேல் அதிபராக வருகிற பொழுது அவர் இந்த மூன்று பேரது வழக்குகளை நிராகரிக்கிறார்.
தமிழக முழுவதும் கொந்தளிப்பு
இந்த இடத்தில் தான் மூன்று பேரது வழக்கும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களை தூக்கில் இடப்போகிறார்கள் என்று தமிழக முழுவதும் ஒரு கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
இதன்போது, அந்த மூன்று பேரது உயிர்களைக் காப்பாற்ற தமிழகத்திலேயே மிகப்பெரிய ஒரு போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தவிர்த்து ஏனைய அனைத்து வகையான கட்சியினரும் பங்கு பெற்றிருந்தார்கள்.
அதன் பின்னர் இந்த வழக்கிலே அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் மூவருடைய தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவினை இட்டிருந்தது.
இந்த நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தில் இவர்களுடைய வழக்குகள் மீதான நீதியரசர் சதாசிவம் தலைமையிலான அமர்வு சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது.
2014 ஆம் ஆண்டு அவருடைய தீர்ப்பின் பிரகாரம் மூவருடைய மரண தண்டனையும் ஆளுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கிலே 7 பேரினது விடுதலைக்கு முதன்மையான காரணம் என்று சொல்வதாக இருந்தால் இந்தத் தீர்ப்பைத் தான் கூற முடியும்” - என்றார்.

