இந்தியா - இலங்கை பாலம் குறித்து நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய எம்.பி
இலங்கையை இந்தியாவுடன் (India) இணைக்கும் பாலம் வர்த்தகத்தை எளிதாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தின் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கையின் சொத்துக்களை, பொருளாதார மீட்சிக்காகப் பயன்படுத்தவேண்டிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
விவேகமாக முடிவெடுக்காவிட்டால், ஏராளமான வளங்கள் இருந்தபோதிலும், இலங்கை ஆழமான பொருளாதார நெருக்கடியில் விழும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது சாலை இணைப்பு தொடர்பான விவாதங்கள் இல்லாமையை அவர் குறையாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாடு உட்பட இந்தியா உடனான இணைப்பின் சாத்தியமான நன்மைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
குறிப்பாக இது இலங்கையின் வடக்குப் பகுதிக்கு பயனளிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய முயற்சிகளின் சாத்தியமான நன்மைகளை விளக்க, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா இடையே பாலம் மற்றும் பிரான்ஸ்- இங்கிலாந்து இடையிலான சுரங்கப்பாதை போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் சர்வதேச உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |