எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட ரணிலின் கைது : ஜி.எல்.பீரிஸ் பகிரங்கம்
அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்டதாக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரை கைது செய்வதற்குரிய நியாயமான காரணிகள் ஏதும் இருக்கவில்லை எனவும் இந்த கைதுக்கு அரசாங்கம் நிச்சயம் சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படல்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். முறையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்படவில்லை.
நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாக செயற்படும் காவல்துறையினரின் பிரதான நோக்கம் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதாகவே அமைந்தது.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
வாக்குமூலம் பெறுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார். சாட்சியாளர்களுக்கு அச்சமூட்டல் அல்லது சாட்சியங்களை இல்லாதொழித்தல் போன்ற சந்தேகம் காணப்படுமாயின் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருக்கலாம்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் சாட்சியாளர்களுக்கு ரணிலினால் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்யும் செயற்பாடாகவே இதனை கருதுகிறோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

