கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டில் ரணில் இறங்குவாரா...! விடுக்கப்பட்டுள்ள சவால்
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதுவுமே செய்ய முடியாது.
எனவே, கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரணில் முதலில் இறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
அரச தலைவர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகினால்தான் மக்களின் மனதை வென்று பிரதமர் ரணிலால் பணியாற்ற முடியும் என்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,
"கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்கின்றது. ஆனால், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய புள்ளியாக விளங்கும் கோட்டாபய வெட்கம் இல்லாமல் இன்னமும் அரச தலைவருக்கான கதிரையில் அமர்ந்திருக்கின்றார்.
தோல்வியடைந்த அரச தலைவராக தான் செல்லமாட்டார் என்று அவர் சவால் விடுகின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாட்டின் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஆனால், கோட்டாபய ராஜபக்சவை உடன் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரணில் முதலில் இறங்க வேண்டும்.
ஏனெனில், கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதுவுமே செய்ய முடியாது.
ராஜபக்ச குடும்பத்தினரைக் காப்பாற்றவே பிரதமர் பதவியை ரணில் பொறுப்பேற்றார் என்று பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு ரணில் செயற்பட வேண்டும். கோட்டாபயவுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் ரணில் ஈடுபடக்கூடாது" என்றார்.
