ரணிலின் பதவி விலகல் தொடர்பில் வெளியாகிய அதிரடி தகவல்: சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
ரணில் பதவி விலக முடியாது
நாடு தற்போதுள்ள நிலைமையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் அரச தலைவர் பதவி விலகும் பட்சத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரே அடுத்த அரச தலைவராக பதவியேற்க வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
ஆனால் பொது மக்கள் பிரதமரையும் பதவி விலகக் கோருவதனால் மிகக்குறுகிய காலத்திற்கு சபநாயகரை பதில் அரச தலைவராக நியமித்து, அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பினைக் கொண்ட ஒருவரை அரச தலைவராக நியமிக்க முடியும் என்ற மாற்று யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறிருப்பினும் கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டமைக்கமைய தானும் பதவி விலகத் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்நிலையிலேயே இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் சரத்துக்கள்
'அரசியலமைப்பில் அவ்வாறானதொரு சரத்து இல்லை. பிரதமருக்கு அவ்வாறு பதவி விலக முடியாது. எனவே அரசியலமைப்பிற்கு அமையவே செயற்பட வேண்டும். மாறாக பிரதமரை பதவி விலகுமாறு கூறுவதனது அரசியலமைப்பை மீறி செயற்படுமாறு வலியுறுத்துவதைப் போன்றதாகும்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிடுகின்றமை கவலைக்குரியது.
அரசியலமைப்பின் 37 ஆவது சரத்தில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது , நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படும் போது , மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக 37 (1) , 37 (2) ஆகிய சரத்துக்களில் இவ்விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட 37ம் சரத்து
பாக்கிஸ்தான் , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த சரத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் இலங்கையில் மாத்திரம் ஏன் பயன்படுத்த முடியாது? எனவே அரச தலைவர் பதவி விலகும் பட்சத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்தைக் கொண்டு செல்வதில் எவ்வித சிக்கலும் கிடையாது' என்று வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
