மன்னாரில் விவசாயிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்த அதிபர் ரணில்
விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அவர்களுக்கு நில உரிமை கிடைக்கவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) இன்று (16) இடம்பெற்ற இலவச காணி உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதிபர் ரணில் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் மன்னார் மாவட்ட மக்களுக்கு 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், 442 காணி உறுதிப்பத்திரங்கள் இன்று அதிபரினால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு காசோலை
இதேவேளை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கான பணத்திற்கான காசோலைகளையும் அதிபர் வழங்கி வைத்தார்.
கடந்த மோசமான காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அழிவடைந்த விவசாய பயிர்களுக்கு விவசாய காப்புறுதி நட்டஈடு வழங்கப்பட்டதுடன் அப்பகுதி கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
அங்கு கருத்து தெரிவித்த அதிபர் ரணில், ”கடந்த மாதம் வடக்கிற்கு வந்த போது மன்னாருக்கு வருவேன் என உறுதியளித்தேன். மன்னாரின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.
வடக்கில் சுமார் 90,000 குடும்பங்கள் காணி உரிமை கோருகின்றனர். 45,000 குடும்பங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி பத்திரப்பதிவு வழங்கும் திறன் கொண்டது.
ஆளுநருக்கு பணிப்பு
ஏனைய 45,000 குடும்பங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மற்றும் வடமாகாண சபைக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.1935ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் பெதுருதுடுவ தொடக்கம் தௌந்தர துடுவ வரையிலான சகல சமூகங்களுக்கும் காணி உரிமமாக மட்டுமே வழங்கப்பட்டது.
எனவே, இந்த உரிமங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம். உரிமம் பெற்ற நிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அவர்களுக்கு நில உரிமை கிடைக்கவில்லை. சில விவசாயிகள் 85 ஆண்டுகளாக நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நாட்டில் காணி உரிமை இல்லாத குடும்பங்கள் சுமார் 20 இலட்சம் உள்ளன. உறுமய அவர்கள் சார்பாக இலவச காணி உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு நாடு திவாலான நிலையில் இருந்து மீண்டு வரும்போது அதன் பலன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
உறுமய வேலைத்திட்டம்
குறிப்பாக உறுமய வேலைத்திட்டம் மீண்டும் மக்களின் சொத்துக்களை பெருக்கி வருகிறது. ஆசியாவில் எந்த நாட்டிலும் மக்களுக்கு இலவச நில உரிமை வழங்கப்படவில்லை. எனவே உறுமய வேலைத்திட்டத்தை நாட்டில் ஒரு புரட்சியாக அறிமுகப்படுத்த முடியும்.
மேல் மாகாணத்தில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமையை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் பொருளாதார சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.
அப்போது யுத்தம் காரணமாக வடக்கு மக்கள் வீடு, உடைமை, காணிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சாதாரணமாக வாழும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
உங்களுக்குக் கிடைக்கும் இந்த நிலத்தை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்களும் நாடும் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |