ரணிலின் இரட்டை நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் விசனம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்த மறுபுறம், வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கான கூட்டத்தை மேற்கொண்டுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் இன்னும் சுதந்திரமாக தமிழ் மக்கள் மத்தியில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அக்கட்சியின் தலைவர், நாடாறுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் இராணுவ பிரசன்னம்
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “பாதுகாப்பு அமைச்சை தமிழ் மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் ஆதிக்கம் இன்னும் குறைவடையவில்லை. 14 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் இன்னும் இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
இன்றும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க பலர் முயற்சிக்கிறார்கள். இராணுவத்தினர் எங்கள் மத்தியில் இருப்பதை நாம் வெறுக்கிறோம். அவர்கள் எமது பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே எமது ஆசை.
இராணுவத்தினர் வடக்கில் இருப்பார்களேயானால் அவர்கள் எந்தவொரு குற்றங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை எமக்கு அளிக்க வேண்டும். தமிழ் மக்களை கருத்தில் கொள்ளாது அரசாங்கம் செயற்படுமானால் அதற்கு கட்டாயம் இராணுவத்தின் ஆதரவு தேவை.
தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
பொது மக்களால் தெரிவு செய்யப்படாது இன்று அதிபராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபராக வரலாம்.
ரணிலின் இரட்டை நிலைப்பாடு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறித்து பல பிரச்சினைகள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து தற்போது அவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் இந்தச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் தற்போது அதனை மறந்து செயல்படுகிறது” - என்றார்.