இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டம்! ரணில் அதிரடி
இலங்கையில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாயத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அதிபர், பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரசாங்க நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய சபை நிறுவப்பட உள்ளதெனவும் அதிபர் தெரிவித்தார்.
கொள்கைத் திட்டம்
இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைத் திட்டம், அதனை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் காமினி சேனாநாயக்கவினால் அதிபரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்த கொள்கை திட்டம் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல், நிலைத்தன்மை மற்றும் ஈடுகொடுக்கும் தன்மையை மேம்படுத்துதல், உள்ளக வளர்ச்சி மற்றும் கிராமிய மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை பலப்படுத்தல், சந்தை பிரவேசம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல், நிறுவன மற்றும் நிர்வாகத் செயற்பாடுகளை பலப்படுத்தல், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை வலுவூட்டுதல் உள்ளிட்ட விடயங்களை உள்வாங்கித் தயாரிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார விவசாயத்திலிருந்து விடுபட்டு, பாரிய மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சிகளை உள்ளடக்கிய நவீன விவசாயத்தை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அதிபர், விவசாய ஏற்றுமதித் துறையானது தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிப்பதாகவும், நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது விவசாயத் துறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் காணி உரிமை
இக்கலந்துரையாடலில், நெல் மற்றும் ஏனைய விவசாய பயிர்கள், பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தின் பலதரப்பட்ட அம்சங்களையும் நவீனமயப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பயிர்ச்செய்கைக்காக 500,000 ஏக்கர் நிலத்தை விடுவித்தல் மற்றும் இலங்கையில் உள்ள விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், விவசாயிகளின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குதல், விவசாய நவீனமயப்படுத்தலுக்கு அவசியமான நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற சவால்கள் குறித்தும் , நவீன விவசாய முயற்சிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பிலான விடயங்கள் குறித்தும் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தினர்.
கிராமிய பொருளாதாரம்
இதற்காக முழுமையான திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த அதிபர், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.
விவசாயத்தை நவீனமயப்படுத்தி, விவசாய தொழில்துறையை விரிவுபடுத்தி,நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி வறுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |