இனப்படுகொலை விசாரணைக்கு அஞ்சியா ரணில் சீற்றமடைந்தார்..!
கடந்த காலங்களில் ராஜபக்சவினர் மேற்குல ஊடகங்களின் கேள்விகளுக்கு மிகுந்த சீற்றத்துடன் பதில்களை அளித்தமை போன்றே தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் மேற்குல ஊடகம் ஒன்றிடம் மிகுந்த சீற்றத்துடன் பேசியிருப்பது அரசியலில் மிக முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது.
எவ்வாறென்றாலும் ஊடகங்கள் மீதான அணுகுமுறை குறித்த விடயங்களும் இலங்கையில் நடைபெறக்கூடிய ஆட்சியின் அணுகுமுறைளும் இங்கே புலப்பட்டு நிற்கின்றன.
ரணில் மென்மையனவர், நல்லவர் என்றும் மேற்குலகத்தின் நண்பர் என்றும் சொல்லப்பட்ட கதைகளின் உண்மை தன்மைகளும்கூட இந்த பேட்டியின் வாயிலாக அம்பலமாகியிருப்பதையும் நாம் காண முடிகின்றது.
என்ன நடந்தது?
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனி நாட்டின் பேர்லின் நகரில் நடைபெறும் உலகளாவிய கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை ஜெர்மன் நாட்டின் தேசிய ஊகடங்களில் ஒன்றாக கருதப்படும் DW International செய்தி சேவையின் முக்கிய ஊடகவியலாளர் மார்டீன் ஹக் சந்தித்து மிக நீண்ட நேர்காணல் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவிய கேள்விகளுக்கு மிகவும் கடும்போக்கான முறையில் அவர் பதில்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனப்படும் ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பில் நான்கு ஆண்டுகளின் பின்னர், சனல் 4 தொலைக்காட்சி முக்கிய செய்தி ஒன்றை நடந்த சில நாட்களின் முன்னர் வெளியிட்டது.
இதில் அசாத் மௌலானா என்ற இலங்கை அரச ஆதரவுக் கட்சி ஒன்றின் முன்னாள் முக்கியஸ்தர் தெரிவித்த கருத்துக்கள் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.
அவரது சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு ஈஸ்டர் படுகொலையின் பின்னால் உள்ள சக்திகள் இவர்கள்தான் என்று சனல் 4 தொலைக்காட்சி குற்றம் சுமத்தியது.
ராஜபக்சக்களின் திட்டமா?
2019ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. அப்போது முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் போட்டி நிலவியிருந்தது.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச அதிபராக வேண்டும் எனில் இத்தகைய தாக்குதலை நடத்துவதே சரி என்றும் அதன் ஊடாகவே தாமும் விடுதலை பெறலாம் என்றும் ராஜபக்ச தரப்பினரின் ஆதரவாளரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று கிழக்கின் முன்னாள் முதலமைச்சராகவும் செயற்பட்ட பிள்ளையானால் திட்டமிட்டே இந்த தாக்குதலை அவர் நடாத்தியதாக அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சியில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்ற பெயரில் பிள்ளையானும் அசாத் மௌலானாவும் இணைந்து செயற்பட்டுள்ளார்கள்.
அத்துடன் இருவரும் ராஜபக்ச தரப்பினருக்கு மிகவும் விசுவாசமாகவும் ஆதரவாகவும் நடந்தமை காரணமாக தற்போதைய நிலையில் அசாத் மௌலானா முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டை சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை நம்பக்கூடிய நிலமையே அதிகமும் காணப்படுகின்றது.
அத்துடன் சனல் 4 தொலைக்காட்சி கடந்த காலங்களின் வெளியிட்டுள்ள ஆதாரபூர்வமான ஆவணப்படங்கள் செய்திகளின் அடிப்படையிலும் இச் செய்திமீது நம்பகம் பெருமளவில் ஏற்படுகின்றது.
சிங்களவர்களே நம்புகின்றனரே?
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சிங்களத் தலைவர்களும் சிங்கள கிறிஸ்தவ மதக்குருக்களும் நம்புவது இங்கே முக்கியமானது. அவர்கள் சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ள ஆதாரங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் கிறிஸ்தவ மதகுருவான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், இறைவனின் சக்தியால் ஈஸ்டர்படுகொலைகளின் பின்னால் உள்ளவர்கள் மறைந்து ஒளிந்துவிட முடியாது என்றும் அவர்கள் இறைவனின் முன்னால் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக இந்தச் செய்தியைப் பார்க்கின்றார்.
அத்துடன் கடந்த காலத்தில் மக்களின் படுகொலைகளுக்கு காரணமான தலைவர்களுக்கு அதே வன்முறை விதி காத்திருந்தது போல ஈஸ்டர் படுகொலைக்கு காரணமானவர்களுக்கும் வன்முறை விதி காத்திருக்கிறது என்று கூறிய அவர், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்திலும் முக்கியமான குரலாக தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் ஈஸ்டர்படுகொலைக்கு நீதி தரவில்லை என்று கூறி வந்த ரஞ்சித் ஆண்டகை சனல் 4 செய்திக்குப் பிறகு சர்வதேச விசாரணை வழியாக ஈஸ்டர் படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
முன்னாள் அதிபரே ஏற்பு
இதேவேளை இலங்கையின் முன்னாள் அதிபரான மைத்திரிபால சிறிசேனவும் சனல் 4 தொலைக்காட்சியின் செய்தியை ஏற்றுக்கொண்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த செய்தி குறித்த கேள்விகளுக்கு கடும் சீற்றம் அடையும் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த காலத்தில் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டவர் மைத்திரிபால சிறிசேன.
இருவரும் ஆட்சி நடாத்திய காலத்தில்தான் ஈஸ்டர்படுகொலை நடந்தது என்பதால் அவர்கள் அதில் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் உண்மையாக நடக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
இந்த நிலையில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று அண்மையில் கூறியிருந்தமை இங்கே முக்கியமானது.
அத்துடன் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சர்வதேச விசாரணை வழியாகவே ஈஸ்டர் படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் இலங்கைக்குள் நடக்கும் விசாரணகளால் நீதி கிடைக்கும் என்று தாம் நம்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கையர்கள் ஏற்கவில்லை என்ற தோரணையில் அதிபர் ரணில் கருத்து தெரிவித்தமையையும் காண முடிகின்றது.
இனப்படுகொலை விசாரணைக்கு அஞ்சியா?
இந்த நிலையில் ரணில் ஜெர்மனிய ஊடகத்திடம் சீற்றமடைந்திருப்பது 2010ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பிபிசி ஊடகத்திடம் சீற்றமடைந்து தெரிவித்த பதில்களை நினைவுபடுத்துகின்றன.
அதேபோன்று 2013ஆம் ஆண்டில் பொதுநலவாய மாநாடு நடந்த சமயத்தில் சனல் 4 தொலைக்காட்சியின் கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச பாராமுகமாகவும் நையாண்டித்தனமாகவும் அளித்த பதில்களும் நினைவுக்கு வருகின்றன.
இவர்கள் மேற்படி ஊடகங்களுக்கு பதில் சொல்லாமல் பொறுப்பை தட்டி கழித்த நிலையில் தொடர்ந்தும் ஊடக கேள்விகளுக்கும் மக்களின் கேள்விகளுக்கும் சர்வாதிகார மொழியில் செயலாக பதில் அளித்தார்கள்.
தற்போது ரணிலின் சீற்றமான பதில் குறித்து மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியின் விருப்பத்திற்கு ஆட முடியாது என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
உங்களைப் போலவே சர்வதேச ஊடகத்திற்கு அதிபர் ரணில் பதில் அளித்துள்ளார் என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் அதுதான் சரியானது என்றும் மகிந்த ராஜபக்ச பதில் அளித்தார்.
சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் படுகொலை தொடர்பில் முன்வைத்துள்ள ஆதாரங்களும் குற்றச்சாட்டுகளும் இனப்படுகொலை குறித்த விசாரணையிலும் தம்மை வீழ்த்திவிடப் போகிறது என்ற அச்சத்தில்தான் மகிந்த ராஜபக்ச இவ்வாறு பேசுகிறார்.
அத்துடன் மகிந்தவின் குரலாகவே இங்கு இன்றைய அதிபர் ரணிலும் பேசியுள்ளார். சர்வதேச விசாரணை, சர்வதேச தலையீடு என்றதும் அதிபர் ரணில் பெரும் பதற்றம் கொண்டு சீற்றமடைவதற்குப் பின்னால் இந்தச் சிக்கல் தான் இருக்கிறதா?
குறித்த ஊடகவியலாளரின் பதில்களுக்கு அதிபர் ரணில் அமைதியாக பதில் அளித்திருக்கும் பட்சத்தில் அடுத்த கேள்விகள் சனல் 4 தொலைக்காட்சி முன்னர் வெளியிட்ட போர்க்குற்ற மீறல்கள் குறித்த கேள்விகளாகவே இருந்திருக்கும்.
எனவே, தமிழ் இனத்திற்கு எதிரான இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை குறித்த கேள்விகளையும் அழுத்தங்களையும் தவிர்க்கவே ரணில் சீற்றமடைந்தாரா?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.