முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த ரணில்! - இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள்
நெருக்கடியில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்றுக்கொண்டதுடன் இலங்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
ரணில் பதவியேற்ற பின் முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, இன்று டொலரின் பெறுமதியிலும் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் நெருக்கடியை தீர்க்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே ஆகும். இதில் சாதகமான நிலையை ரணில் எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து இலங்கைக்கு பல நாடுகள் நிதியுதவி வழங்க உறுதியளித்தது .
இந்நிலையில் 5 பில்லியன்களில் டொலர் வழங்கவுள்ளதாக உறுதியளித்த நிலையில் அதில் 2 பில்லியன் டொலர் ஜப்பான் வழங்கவுள்ளது சிறப்பான விடயமாகும்.
ஏற்றுமதி நிதியளிப்பு நிறுவனமான இந்தியா எக்சிம் வங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது.
அதேவேளை அடுத்த வாரமளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரணில் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்காவுடன் நெருக்கிய உறவுகளை கொண்ட ரணிலுக்கு பெரும் தொகைநிதியை பெறுவது மிகவும் இலகுவான விடயம் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளுடனும் சுமூக உறவினை ரணில் தற்போதும் முன்னெடுத்து வருகிறார். அடுத்த வரும் நாட்களில் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் பெருமளவு நிதியுதவியை இலங்கைக்கு வழங்க முன்வரவுள்ளதாக ரணிலுக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியா, மற்றும் சீனாவுடனான தமது ராஜதந்திர நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டனர். இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.
எனினும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அரசியல் ஞானி என வர்ணிக்கப்படும் ரணில், புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளமை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் இல்லாது செய்யக்கூடிய சாதக நிலையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
தற்போது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் கலாச்சாரம் விரைவில் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கை இலங்கை மக்கள் மத்தியில் தற்போது மலர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.