சி.ஐ.டி விசாரணையால் ரணிலுக்கு காத்திருக்கும் சிக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, 16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரத்தியேக செயலாளர் சாண்த்ர பெரேரா மற்றும் பல பாதுகாப்புத் தலைவர்களிடம் CID முன்னர் விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
ரணில் நாளை கைது
முன்னாள் ஜனாதிபதியின் இந்த பயணம் உத்தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில் இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்ததாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், ஜனாதிபதி செயலகத்தின் வருகைக்காக 16.9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கைது செய்யப்படுவார் என்ற கருத்தை சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சமூக ஊடக கணக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமமான அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவை நாளைய தினம் அதிகாரிகள் கைது செய்யத் தவறினால் தனது செயற்பாடுகளை நிறுத்தி விடுவதாகவும் திலகசிறி விளக்கியுள்ளார்.
மேலும் சுதத்த திலகசிறி தேசிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளர் என்பதுடன் அந்த கட்சிக்கான ஆதரவினை வெளியிட்டு காணொளிகள் வெளியிட்டு வருபவராவார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உள்ள சிறப்புரிமை மற்றும், குற்றத்தின்பாரதூரத்தை பொருத்தே கைது செய்வது சாத்தியமாகும் என கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன்னை 'மிஸ்டர் கிளீன்' என்று அழைத்துக் கொண்ட தலைவராவார்.
மனைவியின் பட்டமளிப்பு விழா
நாடு வங்குரோத்தடைந்து பொதுமக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, பதவிக்குத் வந்த ரணில் தற்போதைய அரசாங்கத்தால் விமர்சனத்துக்குள்ளாகிவரும் பின்னணியில் இந்த கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
மக்கள் துன்பப்படும்போது, அவர் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஒரு பரிவார அரசியல் கூட்டத்துடன் பிரித்தானியா சென்றிருந்தார்.
இதனை விசாரித்து நீதிமன்றில் சமரிப்பிக்கப்பட்ட அறிக்கையில், “இது ஒரு தனிப்பட்ட பயணம், ஒரு அதிகாரப்பூர்வ பயணம் அல்ல” என்ற விடயம் அம்பலமாகியது.
இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பொதுப் பணத்தைச் செலவழித்து தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு அவர் அங்கு செலவிட்ட பொதுப் பணம் ஒரு கோடியே 69 இலட்சம் ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் தற்போது, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் பி அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக அமெரிக்காவிலிருந்து லண்டனுக்குத் திரும்பியுள்ளார்.
அது செப்டம்பர் 22 மற்றும் 23, 2023 அன்று என அறிக்கை கூறுகிறது. அவரது கியூப மற்றும் அமெரிக்க விஜயம் ஒரு அதிகாரப்பூர்வ விஜயமாக இருந்தாலும், இரண்டு நாள் லண்டன் பயணம் ஒரு தனிப்பட்ட விஜயமாகும்.
ஜனாதிபதி தனிப்பட்ட பயணங்களுக்கு தனிப்பட்ட பணத்தை செலவிட வேண்டியிருந்தாலும், ரணில் அதற்கும் 16.9 மில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை செலவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் பி-அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ரணிலின் நீண்டகால தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டனர்.
இதன் பின்னணியில் ரணிலின் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க, ரணிலின் மேற்கூறிய ஊழல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவரும் அழைக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பி-அறிக்கை மூலம் காவல்துறை சமர்ப்பித்ததன்படி, விக்ரமசிங்க தனது மனைவியின் முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பயணம் தொடர்பான விசாரணை இதுவாகும்.
இதற்கிடையில், விக்ரமசிங்க அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். செப்டம்பர் 2023 இல் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ததாக வெளியான செய்திகள் தவறானவை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு முறையான அறிக்கை வெளியிடப்படும் என்று அவரது அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த சமீபத்திய நிகழ்வு, 1980கள் மற்றும் 1990களில் பட்டலந்த சித்திரவதை வளாகத்தில் விக்ரமசிங்கே ஈடுபட்டதாகக் கூறப்படுவது உட்பட, அவரது நீண்ட மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல் வரலாற்றை பொதுமக்கள் மீண்டும் ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
