ஆதரவளிக்காத அனைத்து எம்பிக்களும் பேரிடி: தேர்தலை நோக்கிய ரணிலின் அதிரடி நகர்வு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்காத அரசாங்கக் கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான அமைச்சர்கள் மற்றும் பல கட்சி அமைப்புக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காதவர்களை அரசாங்கத்தின் பெயரில் வைத்துக்கொண்டு எந்த பிரயோசனம் இல்லை எனவும், தேர்தல் தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களை எதிர்கட்சிகளிடம் கொடுத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எச்சரிக்கை அறிவிப்பு
எனவே இந்த முக்கியமான தருணத்தில் ஆதரவளிக்காதவர்களை நீக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி நேற்று (05) நடவடிக்கை எடுத்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர்கள்
மேலும், வேறு சில அரச கணக்காய்வாளர்களுக்கும், அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் தயங்காமல் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பல இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து நீக்கப்படாமல், அதற்குப் பதிலாக இந்த அறிவிப்பின் பிரகாரம் பதவி விலகுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |