இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த ரணிலின் வழக்கு
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8வது முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (22.08.2025) கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணம்
வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.
இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விக்ரமசிங்க கைது
அதன்படி, விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவர் இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.
சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்தனர்.
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி தொடர்பான விசாரணைகள், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
மேலதிக மன்றாடியார்
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் விளக்கமளித்தார். அதற்கமைய, வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 2025 மார்ச் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாக திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பின்னர் 2025 மே 23 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரால் காவல்துறை மாஅதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பின்னர், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்ததாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் விசாரணை முழுமையடையாததால், பிரதிவாதியை காவலில் வைக்குமாறும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.
எனினும், பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சந்தேகநபரின் உடல்நிலை மற்றும் அவரது மனைவியின் உடலநிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் அனுமதிக்குமாறு கோரினார்.
இதற்காக பல்வேறு காரணங்களை பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்தார். ரணில் விக்கிரமசிங்க, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அவருடைய மனைவி ஒரு புற்றுநோயாளி என்றும், அவரை கவனித்துக்கொள்ள பிரதிவாதியை தவிர வேறு யாரும் இல்லையென்றும் சுட்டிக்காட்டி பிணை வழங்குமாறும் கோரியிருந்தார்.
இருப்பினும், மாலை 5.30 மணியளவில் நீதவான் வழக்கு தொடர்பான உத்தரவை அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மின்சாரம் துண்டிப்பு
இதன்போது, நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்து. இதனையடுத்து, இரவில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதவான் அறிவித்தார்.
இந்த தீர்ப்பின்போது பிணை வழங்குவதற்கு பாரதூரமான காரணங்களே கவனத்திற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட நீதிவான், பிரதிவாதியினது மனைவியின் உடல்நிலை இதற்கான காரணமாக அமையாது என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பிரதிவாதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு இணங்க, அவர் லண்டன் பயணத்தின்போது பயன்படுத்திய நிதி அரச நிதியல்ல என்பதை பிரதிவாதி தரப்பு நிரூபிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நிலையில் நீதிவான் பிணைக்கோரிக்கையை நிராகரித்தார்.
இதேவேளை இரவு 10 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விளக்கமறியலுக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறிது நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
