அரசாங்கத்தை பிளவடையச் செய்யும் ரணிலின் பாதீடு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் தற்போதைய அரசாங்கம் காற்றில் பறக்கவிடப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதி வரவு - செலவுத் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இறுதி வரவு செலவுத் திட்டம்.
மக்களின் ஆணை இல்லாத மிகச் சிறிய கூட்டம் இந்த நாட்டு மக்களைக் கொடூரமாகப் பிழிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலின்படி நாட்டை நடத்துகிறார்கள்.
இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம். இந்தத் தருணத்தில் பொதுத் தேர்தலுக்குச் சென்றால் மக்களின் கருத்தை அறியலாம்.
நாமும் அழிந்து போவோம்
இப்போதே அரசியல் விளையாடுவதற்கான களத்தை உருவாக்குகிறார்கள். ரணில், ஐக்கிய மக்கள் சக்திக்கு மிகவும் பயப்படுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் வெற்றியடைய வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் பல்வேறு கணக்கெடுப்புகள் மூலம் காட்ட முயற்சிக்கின்றனர். திருடர்களுடன் சென்றால் நாமும் அழிந்து போவோம்” - என்றார்.